இலங்கையில் நடைபெறவிருக்கும் ‘மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார்.
நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்கள் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம் செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.