தென்னிலங்கை இனவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: மக்கள் போராட்ட முன்னணி

கடந்த பொசன் போயா தினத்தில் தென்னிலங்கை இனவாதிகள் தையிட்டி விகாரைக்கு வந்ததாகவும் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று (12) வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
‘மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும். தாமதிக்காமல் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்’. கடந்த ஜூன் 10ஆம் திகதி அன்று பொசன் நிகழ்வு எனும் போர்வையில் தையிட்டிக்கு வந்தவர்கள் யார் என்பதை நான் அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்களக் கடும் போக்கு தேசிய வாத சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளரே அங்கு வந்திருந்தார்கள். பொதுபலசேன ராவண பலய போன்ற கடும்போக்குத் தேசியவாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே இவர்கள்.

தொடர்ச்சியாக அமைதியான முறையில் நாங்கள் செய்யும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பியிருக்கின்றார்கள்.விளக்குகளை காலால் தட்டி இருக்கின்றார்கள். மாலைகளை கிழித்து எறிந்திருக்கின்றார்கள். நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று நேரடியாக மிரட்டி இருக்கின்றார்கள் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்டவர்களை 10ம் திகதி முழுமையான காவல்துறை பாதுக்காப்புடன் வரவேற்று தையிட்டியின் சட்டவிரோத விகாரையினுள் வைத்திருந்தார்கள். இந்த காடையர் கூட்டம் உள்ளேயும் காணிகளைத் தொலைத்தவர்கள் வெளியே வெயிலில் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இங்கு வழிபட வரவில்லை, எமது கடந்தகால அனுபவ அடிப்படையில் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்தே அதிகம்.

இவர்களைப் போன்றவர்கள் தங்கள் இனவாதத் தேவைக்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்துவார்கள் என நன்கு அறிந்த அரசாங்கம் இதற்கு எந்த தீர்வையும் முன்வைக்காது அமைதியாகவுள்ளது என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.