பிரித்தானியாவின் தனியார் ஆயுதப்படை நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட எஸ்.ஏ.எஸ். என்ற விசேட படை உள்ளிட்ட பிரித்தானிய படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருவதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், ‘முன்னதாக வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், காவல்துறை விசாரணைகளுக்கு உதவியிருந்தாலும் இந்த விடயத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மோதலின் போதான போர்க்குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் கேத்தரின் வெஸ்ட் பதிலளித்துள்ளார்.
1980களில் இலங்கையில் செயற்பட்ட பிரித்தானிய படையினர் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, 2020 மார்ச் முதல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் லண்டனில் உள்ள தீர்ப்பாயம் ஒன்றில் சாட்சியமளிக்குமாறு குறித்த ஆயுதப்படையினர் வலியுறுத்தப்பட்ட போதும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அதனை தடுத்து நிறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சூழ்நிலையிலேயே பிரித்தானிய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் பாராளுமன்றில் பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையில் செயற்பட்ட காலப்பகுதியிலேயே எஸ்.டி.எஃப் என்ற விசேட அதிரடிப்படையை ஸ்தாபிக்கவும் பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ் சேவை நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.