மட்டக்களப்பில் உள்ள 3 பாடசாலைகளைச் சேர்ந்த 78 மாணவர்கள் திடீர் நோய் நிலைமையினால் இன்று (04) பாதிக்கப்பட்டனர். குறித்த மாணவர்களுக்கு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
குறித்த 3 பாடசாலைகளுக்கும் ஒரே நபரே உணவு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 78 மாணவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த பாடசாலைகளுக்கான உணவு தயாரிக்கப்பட்ட இடத்தையும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் அதன் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் சிகிச்சைகளுக்காக சில மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.