யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் நீதியமைச்சரிடம் இன்று (04) இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இது முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் என்று தெரிவித்தார். செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட முழுமையான மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச சட்டங்களுக்கு அமைய, குறித்த இடம் மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம், அங்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான உரிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஏற்கனவே அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் போதுமானதாக இல்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
அடுத்த கட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் அவர்கள் அந்த பணியை இடைநிறுத்தி விடுவார்கள்.
தேவையாயின் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் ஆய்வு பணிகளுக்கான நிதியுதவியை பெற்று தர முடியும்.
எனவே, குறித்த இடத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துவதுடன் தேவையான ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இந்த விடயத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறான பணிகளுக்காக நீதியமைச்சு ஏற்கனவே நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில் பற்றாக்குறை ஏற்படுமாயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளித்தார்.