திருகோணமலை குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் மீது கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில் கடற்படையினரால் நேற்றைய தினம் (03) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கடற்படை பேச்சாளர் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சில தரப்பினரை கைதுசெய்து, கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின்; பிடியிலிருந்து தங்களின் படகை விடுவித்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
கடற்படையினர் எச்சரித்ததுடன், எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவர்கள் தொடர்ந்தும் தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் முயன்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, குழப்பம் ஏற்பட்டு, தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதால் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியின்போது, கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சு, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வர முடியும் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்றும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்’. ‘ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது’. ‘அதனாலேயே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குச்சவெளி துப்பாக்கிச்சூடு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும் என்றும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை இன்று (04) பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குறித்த தரப்பினர் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அது தொடர்பில் பாராளுமன்றில் தகவல் வெளியிடுவதாக குறிப்பிட்டார்.