அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெறும் நிதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (04) கருத்துரைத்த அவர், இதற்காக சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு கிடைக்கப் பெறும் நிதியே நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வாறான நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் கோருகிறது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெறும் நிதி தொடர்பில் எவ்வித பரிசோதனைகளும் இடம்பெறுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் எங்கிருந்து அவ்வாறான நிதி கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்