வடக்கின் 3 பிரதான கட்சிகளும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்…

தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாட முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (28) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தசந்திப்பின் போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் நேற்று (28) தொலைபேசி ஊடாக மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த தொலைபேசி கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அதேநேரம் தங்களது தரப்புக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் அவர் சுமந்திரனிடம் பிரஸ்தாபித்துள்ளார்.

இந்தநிலையில் நாளைய தினம் (30) தாமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தனிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தேவையேற்படுமாயின் 3 கட்சிகளும் சந்தித்து கலந்துரையாட முடியும் என்று எம்.ஏ.சுமந்திரன் தம்மிடம் குறிப்பிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.