அரசியலில் இருந்து விடைபெறவுள்ள ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 42வருட அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி முரண்பாடு காரணமாக, இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவே தான் அரசியலில் இருந்து விலகுவதான இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினரும் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்போரும் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரியிருந்தனர். ரணில் கட்சியிலிருந்து விலகா விட்டால், கட்சியிலுள்ள சிலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியை உருவாக்குவதற்கும் எத்தனித்து வருகின்றனர். இதன் காரணமாகவே தான் அரசியலிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கட்சியைக் காப்பாற்றக் கூடிய ஒருவரிடம் கட்சியை ஒப்படைக்கத் தான் விரும்புவதாகவும், அத்தகைய தலைவர் சந்திக்காது போனாலும் தான் அரசியலில் இருந்து விலகுவது உறுதி என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்த்துவதற்காக, ரணில் விக்கிரமசிங்க வழிவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அறிவிப்பானது அரசியலில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படாலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.