காணி நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெறத் தீர்மானம் – காணி அமைச்சு

காணி நிர்ணயம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், காணி  நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரதேசத்தின் அரசியல் தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான காலம் மற்றும் இதர வசதிகளுக்குரிய திட்டத்தை தயாரிப்பதற்காக 2430ஆம் இலக்கத்தின் பிரகாரம் 2025.03.28ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது அவசியமாகும். ஆகவே, இதற்குரிய சட்ட வழியிலான ஆலோசனைகளை வழங்குமாறு காணி அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளார்.

காணி நிர்ணயம் தொடர்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் பற்றிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் என்று தலைப்பிட்டு காணி அமைச்சின் செயலாளர் சட்ட மா அதிபருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காணி உரித்து நிர்ணய திணைக்களம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைப்பின் விடயதானத்துக்குள் உள்ளடங்குகின்ற நிலையில், 1931ஆம் ஆண்டு 20ஆம் இலக்க காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் உள்ள காணிகளை நிர்ணயம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1931ஆம் ஆண்டு முதல் இந்த திணைக்களத்தால் 1931ஆம் ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் காணி நிர்ணயம் (தீர்த்தல்) தொடர்பில் 5616 விளம்பரங்கள் வெளியிடப்பட்டு அந்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு காணி நிர்ணயம் (தீர்த்தல்) தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்துக்காக நிர்ணயத்துக்கான விளம்பர இலக்கம் 5617 முதல் 5623 வரையில் காணி நிர்ணயத்துக்கான வெளிப்படுத்தலுக்கான 07 விளம்பரங்கள் குறித்த கட்டளைச் சட்டத்தின் 4ஆவது உப பிரிவின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, அதன் 1ஆவது உப ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய காணி அதிகாரிகளால் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. இதற்கமைய காணி உரித்து சட்டத்தின் ஏற்பாடுகள், ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு காணி நிர்ணய அதிகாரிகளால் கட்டளைச் சட்டத்தின்  5ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் காணி நிர்ணயத்துக்கு மேலதிகமாக  காணி தீர்த்தலை நிறைவுறுத்த கட்டளைச் சட்டத்தின் 08ஆவது பிரிவின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதற்கு நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காணி தீர்த்தலுக்காக வெளியிடப்பட்ட 07 விளம்பரங்களுக்கு அமைவாக 2430 என்ற இலக்கத்தின் 2025.03.08ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பிரசுரிக்கப்பட்டது.

இந்த விளம்பரம் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளர்கள் ஊடாக பத்திரிகைகள் ஊடாக  விரிவான தெளிவுபடுத்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. காணி நிர்ணயம் தொடர்பான விளம்பரம் அரச காரியாலயம் மற்றும் அந்த கிராமத்தின் பொது இடங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த காணி நிர்ணயம் தொடர்பில் தவறான நிலைப்பாடு அல்லது தவறான புரிதல் வடக்கு மாகாண மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் என்னிடம்  வலியுறுத்தியுள்ளனர்.

பிரசுரிக்கப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக காணி உரித்தினை உறுதிப்படுத்துவதற்கு  மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலவரையறைக்குள் காணி உரித்தினை உறுதிப்படுத்தாவிடின் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வடக்கு மாகாணத்தில் நிலவிய யுத்தத்தால் மக்களின் காணிகளுக்காக அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போனமை, கணிசமான தரப்பினர் வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்களின் காணி உரித்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்று வடக்கு மாகாண அரசியல் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் தற்போதைய தலைமுறையினருக்கு தமது பரம்பரை அடிப்படையிலான காணிகளை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிரமம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு அரசியல் தரப்பினர்கள் முன்வைத்துள்ள காரணிகள் மற்றும் வலியுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் வடக்கு மாகாண அரசியல் தரப்பினரது பங்குபற்றலுடன் 2025.0523ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது இவ்விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், காணி  நிர்ணயத்துக்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையான இணக்கப்பாட்டுடன்,  இந்த காணி நிர்ணய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை  சரியான மற்றும் துல்லியமான வகையில் தயாரித்து குறித்த பிரதேசத்தின் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அவற்றை தெளிவுபடுத்தி முறையான வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பிரதேசத்தின் அரசியல் தரப்பினருடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான காலம் மற்றும் இதர வசதிகளுக்குரிய திட்டத்தை தயாரிப்பதற்காக 2430ஆம் இலக்கத்தின் பிரகாரம் 2025.03.28ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வது அவசியமாகும். ஆகவே இதற்குரிய சட்ட வழியிலான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.