திருகோணமலையில் தமிழரசு கட்சியும் முஸ்லீம் காங்கிரஸூம் இணைகின்றன

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசனும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

திருகோணமலையில் வைத்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேச சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை வகிப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன், இறுதி இரு ஆண்டுகளில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.

அதேபோன்று மூதூர் பிரதேச சபையில் முதல் இரு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தவிசாளராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரு ஆண்டுகள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் தவிசாளராகவும் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர் என்ற வகையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை உள்ளிட்ட சபையில் பரஸ்பம் ஆதரவை வழங்குவற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.