பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டதை அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அதன் பின்னர் கல்வி அமைச்சுக்கு முன்பாக வீதியில் அமர்ந்து அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
பின்னர் அதிகாரிகளின் தலையீட்டுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதேவேளை, அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து திருக்கோவில் பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு செயலமர்வு ஒன்றை அறிவிக்க தம்பட்டையை சேர்ந்த மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் அவர்களை வாளால் தாக்கியதுடன் அவர்களிள் இரு மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் இன்று காலை ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



