‘உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஷக்களை கண்டோம்’ என்று அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ் ராஜபக்ஷக்கள் தோற்றம் பெறுவார்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இது கவலைக்குரியது’ என்று அவர் கூறியுள்ளார். ‘வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கு அத்திவாரமிட்டுள்ளோம்’.
‘நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம்’ என்று பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ‘சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். மக்கள் எதிர்பார்த்த அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்குவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறோம். பாராளுமன்றத்தை கூத்து கூடமாக்க இடமளிக்க முடியாது’.
‘பாராளுமன்றத்தை நாங்கள் நிர்வகிக்கிறோம். புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குள் கஞ்சா போதைப்பொருளை பாவித்தார்கள்’. ‘குழுவாக ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவித்தார்கள். நான் நேரடியாக பார்த்துள்ளேன்’.
‘ராஜபக்ஷக்களின் காலத்தில் தான் பாராளுமன்றம் மிகமோசமாக பாதிக்கப்பட்டது’ என்று அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.