இலங்கை வருகிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்: வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலவங்கையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘போர் முடிவடைந்த பிறகு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்குரிய யோசனையை நாம் முன்வைத்தோம்’. வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்குரிய செயலணி யோசனையும் முன்வைக்கப்பட்டது. அவை இன்னும் அமுலுக்கு வரவில்லை’. அரசியல் ரீதியில் தற்போது வங்குரோத்தடைந்துள்ள தரப்பினரே தமக்கு புத்துயிர் அளித்துக்கொள்வதற்கு போரை பயன்படுத்த முற்படுகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தற்போது சமாதானம் என்பதே முக்கியம். அதனை செய்வதற்கு நாம் முன்வரவேண்டும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனைக்கூட எம்மால் முன்வைக்கப்பட்டதுதான். போர் முடிந்த பிறகு செய்யப்பட வேண்டிய விடயங்கள்முன்னெடுக்கப்படாததால்தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியளித்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இனவாதம் பேசினால் அது நல்லிணக்க முயற்சிக்கு தடையாக அமையும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலையிட்டாலும், தலையிடாவிட்டாலும்கூட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு எமக்கு உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.