மக்களின் காணிகளை அரசுடமையாக்கும் அவசியம் இல்லை என்று அரசாங்கம் அறிவிப்பு

மக்களுக்கு சொந்தமான காணிகளை அரசுடமையாக்குவதற்கு எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமைக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பாராளுமன்றில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்துரைத்த போதே அமைச்சர் பிமல் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலப்பகுதியில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமையின் ஊடாக தாம் குறிப்பிடும் விடயம் தெளிவாகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான விடயம் என்று தெரிந்தும் எவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஆளும் தரப்பு வெளியிடும் என்பதை சிந்திக்க வேண்டும். வடக்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியாக உள்ள சகல மக்களும் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் தெரிவு செய்துள்ளனர் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறிருக்கையில் அந்த மக்களின் காணிகளை அபகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை.
ராஜபக்ஷக்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பார்த்த கண்ணோட்டத்தில் எம்மை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வடக்கு மாகாணத்துக்கு மாத்திரமின்றி முழு இலங்கையையும் உள்ளடக்கும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று மக்களுக்கு காணிகளை வழங்கும் வகையிலேயே வர்த்தமானி வெளியிடப்பட்ட சட்டமும் உள்ளது. எனவே, எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் ஊடாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். அதேநேரம், பொது மக்களுக்கு சொந்தமான இடங்களில் அரச தரப்பினால் அடையாளம் இடப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் விவசாய அமைச்சும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.