சர்வதேச தேயிலை தினம் எதிர்வரும் 21ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதில் இலங்கை பெருந்தோட்ட தொழி லாளர்களின் வகிபாகம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. மே 21ஆம் திகதி சர்வதேச தேயிலை நாளாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அஸாம் மாநில தேயிலைத் தோட்டத்தில் சீன தொழிலாளர்கள் 1838ஆம் ஆண்டு டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், மலேசியா, உகண்டா, தன்சானியா போன்ற தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகளில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இலங்கையில் உள்ள பெருந்தோட்ட மக்கள் தேயிலை தினத்தை கொண்டாடுகின்றார்களா? என்றால் அது கேள்விகுறியான விடயமே. சர்வதேச மட்டத்தில் தேயிலை தினத்தை முன்னிட்டு பல நிகழ்வு கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தியை காணாதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோன்று பலர் தேயிலை தொழிற்து றையை விட்டு மாற்று தொழிற்துறையை நோக்கி நகர்கின்றனர். தங்களின் அடுத்த தலைமுறை இந்த தொழிலை செய்ய பெருந்தோட்ட தொழிலாளர்கள் விரும்புவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. பெருந்தோட்ட தொழி லாளர்கள் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்து வருவதோடு, எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே பணியாற்றுகின்றனர். நாட்டில் ஏனைய தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற ரீதியில் ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலுடன் பணியாற்றுகின்றனர். குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து விழுதல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என பல்வேறுப்பட்ட சவால்களுடன் மழையிலும் வெயிலிலும் அந்த மக்கள் தங்களின் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இன்றும் அந்த மக்களின் சம்பள பிரச்சினை தொடர்கிறது. காணி பிரச்சினை தொடர்கிறது. வீட்டு பிரச்சினை தொடர்கிறது. அந்த மக்கள் வாழும் வீடுகளில் சிறியளவான புனரமைப்பு செய்வதற்கும் தோட்ட நிர்வாகத் தின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறு புனரமைக்கப்படும் வீடுகளை பெருந்தோட்ட மக்களின் சொந்த வீடுகளாக கருதவும் முடியாது.
யாருக்கு சர்வதேச தேயிலை தினம்
உண்மையில் இலங்கையை பொறுத்தவரையில் பெருந்தோட்ட தொழிலாளர் சர்வதேச தேயிலை தினத்தை கொண்டாடுவதில்லை. அந்த கொண்டாட்டத்தில் பெருந்தோட்ட மக்க ளின் வகிபாகமும் குறைவாகவே உள்ளது. இலங்கையில் உள்ள பல அரச சார்பற்ற நிறுவனங்களே இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன. அந்த அமைப்புகளுக்கான நிதியுதவி சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. எனினும் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் அரசியல் தரப்பினரும், அரசாங்கமும் இந்த தினத்தை மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்வதில்லை. குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் அல்லாதவர்களே தேயிலை தினத்தை கொண்டாடுகின்றனர்.
தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளை தங்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த ஒரு நிகழ்வாக கொண்டாடும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், தேயிலை தினத்தை அவ்வாறு கருதுவதில்லை. இன்றும் பெருந் தோட்ட மக்களுக்கான சம்பளம், வீடமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தே கவனம் செலுத்தப்படுகின்றன. மாறாக அந்த மக்களின் அடையாளம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை. அத்துடன் இலங்கையில் தேயிலை தொழிற்றுறையை பொருத்தவரையில் 75 சதவீதமான தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் அவர்களுக்கு சர்வதேச தேயிலை தினத்தை கொண்டாடுவதில் அதிக நாட்டம் ஏற்படவில்லை. உண்மையில் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் அந்த மக்களை வழிநடத்திய தலைவர்களே.
இதற்கான காரணம் என்னவென நோக்கும் போது, போதிய விழிப்பு இன்மையே பிரதானமான விடயமாக அமைகிறது. எப்போதும் அந்த மக்களை வழிகாட்டுவதற்கு ஒருவர் அல்லது ஏதேனும் ஒரு தரப்பின் தலையீடு அவசியமாகவுள்ளது. தங்களுக்கான உரிமைகளுக்காக தாங்களாகவே அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. அதேநேரம் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு தனி இடமுண்டு. குறிப்பாக தேயிலை ஏலத்தில் பல முன்னணி நாடுகளுடன் ‘இலங்கை தேயிலை’ போட்டியிடும் நிலையில் உள்ளது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கையும் வகிக்கின்றது. பல வகைக ளின் கீழ் உலக சந்தையில் இலங்கை தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இவற் றின் முழுமையான பலன் பெருந்தோட்ட தொழி லாளர்களை சென்றடைவதில்லை. அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு போதிய வேதனத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள், உலக சந்தையில் போதிய விலை கிடைப்பதில்லை என்ற ஒரு விடயத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. உண்மையில் இந்த விடயத்தில் ஒரு மாஃபியா இடம்பெறுவதாக பல அரசியல்வாதிகள் பல் வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். பெருந்தோட்டங்களை கையாளுகின்ற நிறுவனங் களுடன் இணைந்த பிற நிறுவனங்களே சர்வதேசத்துக்கு தேயிலையை கொண்டு செல்கின் றன. அந்த நிறுவனங்களின் ஊடாக கிடைக்கும் வருவாய் விபரங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை என்ற ஒரு குற்றச் சாட்டும் உள்ளது.
இந்தநிலையில் இம்முறையும் பெருந்தோட்ட மக்களின் பங்கேற்பின்றி பல இடங்களில் சர்வதேச தேயிலை தின நிகழ்வு கள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன
வின் தலைமையில் மஹியங்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் தேயிலை தினத்தை
யொட்டி நிகழ்வொன்று இடம்பெற்றது. மறுபுறம் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையிலான நிகழ்வு இறக்கு வாணை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றது. இருப்பினும் இந்த நிகழ்வுக
ளில் பெருந்தோட்ட தொழிலாளர் பங்கேற்றி ருக்கவில்லை. உண்மையில் சர்வதேச தேயிலை தினம் தொடர்பில் அறியாத மக்களாகவே பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெளிப் படுத்துகின்றன. இந்த விடயம் தொடர்பில் பல பெருந்தோட்ட மக்களிடம் வினவப்பட்டமைக்கு அமைய, குறித்த தினத்தை அந்த மக்கள் முக்கிய நாளாக கருத்திற் கொள்வதில்லை என்பது தெரியவருகிறது.
அந்த மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த கவலையே உள்ளது என்பதும் இதனூடாக புலப்படுகிறது. இதன்படி, தங்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்பு பெருந்தோட்ட மக்கள் மத்தியில் இலை மேல் உள்ள நீரை போல காணப்படுகிறது. அந்த நிலை மண்ணுடன் கலந்த நீரை போன்று மாற வேண்டும். அதேநேரம், மே தினம் அரசியல்வாதிகளின் கூட்டத்துக்கான தினமாக மாறியுள்ளதை போன்று சர்வதேச தேயிலை தினமும் மூன்றாம் தரப்பின் கொண்டாட்ட நாளாக மாறியுள்ளது.