யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது : மக்கள் போராட்ட முன்னணி

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயகர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று’ என்று மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கடந்த 2022ம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவேந்தலை இன அழிப்பு நாளினுடைய நினைவை, அங்கு ஏற்பாடு செய்திருந்தோம்’. ‘அதன் தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது’.
‘இந்த நிகழ்வு முதல் முறையாக காலிமுகத்திடலில் இடம்பெறும்போது, அங்கு முள்ளிவாய்க்கால் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புகள் வெளிவந்த போதிலும் அந்த எதிர்ப்புகளை மீறி அந்த நாளில் நாங்கள் அந்த நிகழ்வை செய்திருந்தோம்’ என்று மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

‘அத்துடன் யுத்தவெற்றி விழாவாக கொண்டாடப்படவிருந்த அந்த நாள் அன்று இரத்துச் செய்யப்பட்டது’.
‘ஏனென்றால் ஒருநாட்டின் ஒரு பகுதி மக்கள் வடக்கிலே மிக மோசமான முறையிலே கொல்லப்பட்டனர்’.
‘பட்டினியில் இருந்த குழந்தைகள் சிறுவர்கள் என பாராமல் அவர்கள் மீது கொத்துகொத்தாக குண்டுகளை போட்டு கொன்றனர்’.

‘வைத்தியசாலைகள்,பாதுகாப்பு வலயங்கள் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களிலே குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மக்களிற்கு உணவில்லாமல் போதிய மருத்துவசதிகள் இல்லாமல் இருந்த நாட்களை எந்த காரணம் கொண்டும் வெற்றி விழாவாக அதே நாட்டில் இருக்கின்ற இன்னொரு பிரஜை கொண்டாடுவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒரு விடயம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இது மனித மாண்பிற்கே இழுக்கான விடயம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்’.
‘நான்காவது தடவையாகவும் கொழும்பில் ஏற்பாடு செய்ய்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் வழமை போல சில இனவாதிகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்’. ‘இந்த இனவாத செயற்பாடுகளிற்கு எதிராக ஒரு அரசாக இந்த அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு’ என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.

‘அதேபோல இன்றும், யுத்தவெற்றி நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த நாளிற்கு முதலில் ஜனாதிபதி செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது பின்னர் அவர் செல்கின்றார்’. ‘யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயகர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று’. ‘மே 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்றது இலட்சக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இது ஒரு இனஅழிப்பாக பார்க்கப்படுகின்றது’.

‘இதற்கான பொறுப்புக்கூறலை எந்த ஒரு அரசும், சரியான முறையில் ஏற்றுக்கொள்வதாக இல்லை, பொறுப்புக்கூரும் கடப்பாடு, அரசிற்குள்ளது’ என்று மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.