பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் : பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன்…

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் ’16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர்பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர். எங்களின் உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்கள் அதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 18 என்பது எங்கள் அனைவருக்கும் ஆறாத காயங்கள் நீதிக்கான கதறல் ஆகியவற்றின் வலிமிகுந்த நினைவுபடுத்தல். தமிழ் பாரம்பரியத்தை உடைய பிரித்தானியாவின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் உண்மைக்காக, பொறுப்புக் கூறலிற்காக, மனித உரிமைகளிற்காக குரல் கொடுக்கவேண்டிய பொறுப்பை தாம் சுமப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘நாங்கள் உயிர்பிழைத்தவர்களின் குரல்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கவேண்டும், அவர்களின் குரல்கள் மௌனமாக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும்’. ‘இலங்கையில் நிரந்தர அமைதி சமாதானம் நல்லிணக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபடவேண்டும்’ என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.