தமிழர் இனப்படுகொலை நாள் நாளை (18) நினைவுகூரப்படவுள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் இன்று (17) வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன. அதேநேரம், ‘எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், அநீதிக்கு நீதி வேண்டியும் மே – 18 ஆம் நாளில் அணி திரள அழைத்து நிற்கின்றோம்’ என்று தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,’முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘இதன்படி முள்ளிவாய்க்காலில் நாளை முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 க்கு நினைவொளி எழுப்பப்பட்டு 10.30க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்படும்’ என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்படி, திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது
இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலும் நடத்தப்பட்டது.
அதேநேரம் தம்பலகாமம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – நவாலி பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. இதேவேளை, யாழ்ப்பாணம் – அராலி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அத்துடன் மல்லாகம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் கஞ்சி பகிரப்பட்டது.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு அருகில் இன்று இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.



