மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்தபோது அதற்கு  ஜனாதிபதி  அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு  ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.