ஜே.வி.பியின் வரலாறுகளை மறந்து முன்னோக்கி செல்ல முடியாது : ஜனாதிபதி

தங்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து புதிய ஆரம்பத்தை உருவாக்க முடியாதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக எதற்காக எமது வரலாறுகளை நாம் நினைவு கூருகிறோம். அவை பழைய வரலாறுகள், நாம் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளோம். எனினும் அவ்வாறான பழைய வரலாறுகள் எதற்காக எமக்கு தற்போது தேவைப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தற்போதைய சந்தர்ப்பத்தில் உரையாற்ற வேண்டாம் என சிலர் முணுமுணுப்பதற்கும் இடமுண்டு. சிலர் அந்த வரலாறுகளை வரலாறுகளுக்கே சொந்தமானதாக்கிவிட்டு, நிகழ்காலத்தை புதிதாக ஆரம்பிக்க முடியுமென எதிர்பார்க்கின்றார்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

சில குழுக்கள் அந்த வரலாறுகளை மறந்து எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றன.
‘எனினும் எமக்கு அந்த வரலாறுகளை மறந்து, புதிய ஆரம்பம் அல்லது புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை என நாம் நம்புகிறோம்’ என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வரலாறுகள் பல காட்டிக்கொடுப்புகளால் நிரம்பியுள்ளன. தம்முடன் ஒரே களத்தில் ஒன்றாக போராடிய ஒருவர், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் காட்டிக்கொடுப்பு செய்யும் நிலை காணப்படுகிறது.
இன்றும் நாம் அதை அவதானிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி இல்லாமல் ஏனைய அரசியல் குழுக்களில் கால் துடைப்பானாக கூட கவனத்திற் கொள்ளப்படாத தரப்பினர், மிகவும் வீரமிக்க நபர்களாக மாறுகின்றனர். அண்மையில் பட்டலந்தை அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது 88 – 89 காலப்பகுதிகளில் அதற்கு எதிராக இருந்தவர்கள் தற்போது ஊடகங்களுக்கு முன்பாக சென்று அதனை நியாயப்படுத்துவத்தை நாம் காண்கிறோம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகளை பார்த்தால் அவ்வாறானவர்களை மக்கள் பல இடங்களில் புறக்கணித்துள்ளனர் என்பது புலனாவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.