அமெரிக்காவும் சீனாவும் ஒருவருக்கொருவர் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை தற்காலிகமாகக் குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளும் 90 நாட்களுக்கு பரஸ்பர கட்டணங்களை 115 சதவீதம் குறைக்கும் என அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.
சீன இறக்குமதிகள் மீது ட்ரம்ப் 145 சதவீத வரி விதித்திருந்தார். அதேநேரத்தில் சில அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரியை சீனா விதித்தது.
இதனால், நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தின, மேலும் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சங்களையும் தூண்டின.
சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகள் தற்போது 90 நாட்களுக்கு 30 சதவீதமாகவும், அதேவேளையில் அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீன வரிகள் 10 சதவீதம் ஆகக் குறைக்கப்படவுள்ளன.