உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.
இதனூடாக வடக்கு கிழக்கில் தென்னிலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது என்பது ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் பல பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும். இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆதரவை கொடுக்க பின்னிற்கமாட்டோம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.