அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை பறிக்க முயற்சி: கஜேந்திரகுமார் சாடல்

தமிழ் மக்களின் காணிகளை திட்டமிட்ட வகையில் பறிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முயல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள 5,900 ஏக்கருக்கும் அதிகமான காணியின் உரித்தை 3 மாதங்களில் உறுதிப்படுத்துமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என அறிவித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (08) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினையில் காணி விவகாரம் ஒரு அடிப்படையான விடயமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
சிங்கள குடியேற்றத்துக்காகவே இந்த முயற்சி இடம்பெறுகிறது.

பல தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அத்துடன் இலங்கையிலும் பலர் பல சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனை நன்கு அறிந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தன. எனினும் முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் இனவாதிகள் என கூறி ஆட்சியமைத்த தேசிய மக்கள் சக்தியே இந்த அநீதியை இழைப்பதாகவும் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.