பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்: இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிக்கை…

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்படி தகவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம்,மேலும் தெரிவித்துள்ளதாவது;

இன்று அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் ‘ஒபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின.

இந்த தாக்குதலில் மொத்தமாக ஒன்பது (9) பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை, அத்துமீறல் இல்லாதவை. அத்துடன் குறித்த இலக்குகள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் எந்தவொரு பாகிஸ்தானிய இராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளது.

25 இந்தியர்களும் ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.