உலக வங்கியின் தலைவர் நாளை இலங்கை வருகை

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளைய தினம் (07) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 வருடங்களில் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவின் இந்த விஜயமானது உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான வலுவான மற்றும் நீடித்த ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், அவரது விஜயத்தின்போது தொழில் உருவாக்கத்தை ஆதரிப்பதுடன், தனியார் முதலீட்டை அதிகரிப்பது மற்றும் நாட்டிற்கான நிலையான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அஜய் பங்கா தமது விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட அரச மற்றும் தனியார் துறை தலைமைகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்களானது, தற்போதைய சவால்களை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதையும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக தொடர்ந்து மீண்டு வருவதால் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும்; மையமாகக் கொண்டிருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.