தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கையின் தீர்மானத்தை தடுக்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழக மீனவர்களிடம் இருந்து 2022 – 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கைப்பற்றபட்ட படகுகள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. இவ்வாறு 30 இற்;கும் அதிகமான படகுகள் மூழ்கடிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் மீன் இனப் பெருக்கத்தை இலக்காகக்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனினும் இந்தத் திட்டத்தினால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் அண்மையில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைத் திசையில் இருந்து பிரவேசித்த சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரின் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.