காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு கோரி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் காணி உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் முற்படுத்த வேண்டும். இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படுமென சுமந்திரன் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்களால் உரித்தாவணங்கள் இல்லாத காணிகளைப் பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இச்சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
எது எப்படியாக இருப்பினும் வடகிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பலதடவைகள் இடம் பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தமது தெரிவித்துள்ளார்.
பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வைக் குழப்பியதுள்ளதோடு அது இன்னமும்
திருத்தியமைக்கப்படவில்லை.
கட்டாய இடப்பெயர்வுகளாலும் இப்பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமிப் பேரலைகளாலும் அம் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர். இக்காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்த முன்னுரித்தாளர்களிடமிருந்து முறையாக உரித்து மாற்றம் செய்யப்படவில்லை.
பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச்சூழலில் இருந்து தப்பி வெளிநாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் குறித்த வர்த்தமானியில் கேட்கப்பட்டவாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பது என்பது இம்மக்களால் செய்யமுடியாத ஒன்றாகும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அந்த மாகாணத்தின் மக்கள் என்ற ரீதியில் சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றை தாமாகவே ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.