தமிழ் மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசமிருந்த தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகள் தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மத்திய வங்கியினால் குறித்த நகைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், ‘மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சார அடையாளமாக பேணப்பட்டு வந்த சொத்துக்களை இல்லாமல் செய்து தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய பேரினவாத சிந்தனை கொண்ட அரசுகள் தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்திருக்கின்றன’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகைகளை வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள வங்கிகளில் அடகு வைத்த மக்கள் தமது நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தமது முதலீடுகள் அனைத்தையும் இழந்திருப்பதனால் பெரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசு தேர்தல் நலனுக்கானதாக இருந்தாலும் அந்த நகைகள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை வெளிப்படுத்தியமையை வரவேற்கின்றேன்.
எனினும் குறித்த நகைகளை உரியவர்கள் இல்லை என்ற காரணங்களை காட்டி அரசுடைமையாக்காது நகைகளுக்கு உரித்தான தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.