இலங்கை தனது நலன்களை இன்னமும் உறுதியாக பாதுகாக்க வேண்டும் :சீனா

கொந்தளிப்பான உலகத்தை எதிர்கொள்ளும் இலங்கை தனது சொந்த சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை இன்னமும் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா மிகவும் நம்பகரமான சகா என்பதை நம்பவேண்டும் என்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், அமெரிக்காவின் உயர் வரிகளால் உருவாகக்கூடிய சவால்களை புறக்கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு பொருளாதாரத்தின் மீது அமெரிக்க வரிகளின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்த பொருளாதார புயலாலும் பாதிக்கப்படாத வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தின் மிக முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார வலுவிற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை கருத்திற் கொள்ளும்போது அமெரிக்க வரி செல்வந்த நாடுகளிற்கும் வறிய நாடுகளிற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும்.
அதனால் மிகவும் வறிய நாடுகள் மோசமான தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் அபிவிருத்திக்கான இலங்கையின் உரிமை குறைமதிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
அதன் பலவீனமான பொருளாதாரம் மேலும் அழுத்தங்களை எதிர்கொள்ளும்.
குறிப்பாக ஏற்றுமதி துறை கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் என்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்