இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்படிக்கைகளில் இரண்டை வெளிப்படுத்திய கம்மன்பில!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட 7 உடன்படிக்கைகளில் இரண்டு உடன்படிக்கைகளை பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வெளிப்படுத்தியுள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பின் ஊடாக இந்த உடன்படிக்கைகளை பகிரங்கப்படுத்திய அவர், இந்த உடன்படிக்கைகள் வலுசக்தி துறையுடன் தொடர்புடையவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் இரண்டு முத்தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் எண்ணெய் பரிமாற்ற குழாய் ஒன்றை அமைப்பதற்கும் திருகோணமலையை பிராந்தியத்துக்கான வலுசக்தி கேந்திரமாக அபிவிருத்தி செய்வதற்கும் இதனூடாக இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்று குழாய் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன், இதனூடாக அங்கிருந்து அனுப்பப்படும் மசகு எண்ணெய் இங்கிருந்து சுத்திகரித்து மீள அனுப்பப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
3 வருடங்களில் இந்த குழாய் அமைப்பை நிறுவும் திட்டத்தை நிறைவு செய்வதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு ஒப்பந்தத்தில் மதுரை முதல் மன்னார் வரை மின்சக்தி பரிமாற்ற கட்டமைப்பொன்றை நிறுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், 9 மாதங்களில் இருதரப்பு குழுக்களால் இதன் தொழில்நுட்ப மற்றும் அடிப்படை விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் தளத்துக்கும் அதற்கான பணியாளர்களுக்குமான பாதுகாப்பை வழங்குவது இலங்கை அரசாங்கத்தில் பொறுப்பாகும் என்று இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.