பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இன்றைய தினம் (28) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பன குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவும், புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பான மீளாய்விற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு நாளைய தினம் (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, இங்குள்ள பல தரப்பினரையும் சந்தித்து பரந்துப்பட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் கடும் சவாலாக உள்ளமையினால் அதனை நீக்குவதற்கான பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இலங்கைக்கு முன்வைத்துள்ளது.
எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட வேண்டுமானால், அரசாங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
அவற்றில் முக்கியமானதொன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதாகும்.