பரிசுத்தத் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) அதிகாலை வத்திக்கான் நோக்கி பயணமானார்.
அதேநேரம், பரிசுத்தத் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் நேற்றிரவு வத்திகான் நோக்கி பயணமாகினர்.
இதேவேளை, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் தேகம் வைக்கப்பட்டுள்ள திருவுடல் பேழை, இன்று (25) மூடப்பட்டு முத்திரையிடப்படும் என்று வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது.
வத்திக்கான் திருச்சபையின் தலைவராக செயற்படுகின்ற கர்தினால் கெவின் ஃபாரல் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
இதில் நூற்றுக் கணக்கான கர்தினால்களும் புனிதத்துவம் பெற்ற அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது. இதேவேளை, நாளைய (26) தினம் இடம்பெறவுள்ள இறுதி நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இலங்கை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.