ஐக்கிய இலங்கை என்ற ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை: இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அதனை முழு வீச்சில் எதிர்க்கும் என்றும் அந்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஏக்கிய ராஜ்ய முறைமையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதாக அண்மைய தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எதிர்தரப்பினரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒற்றையாட்சியை ஆதரிக்கிறது என்னும் கருத்தை நாம் தெளிவாக மறுத்துள்ள போதும் சிலர் பொது வெளியில் தொடர்ந்து பேசுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.  முதலில், ஒற்றையாட்சியை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுநின்ற காலகட்டத்தில் அதனை மறுதலித்து சமஷ்டி முறையான அரசமைப்பை கோரி உருவாக்கப் பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவோ, அவரது கட்சி சார்ந்த அமைச்சர்களோ அல்லது ஜே.வி.பி. கட்சியின் முக்கியர்த்தர் எவருமோ ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற சொற்கள் அடங்கிய புதிய வரைபை தொடரலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. அதை விடுத்து பொதுவாக பேசுவது பொருத்தம் அற்றதும் அபத்தமானதும் ஆகும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.