01. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் அதற்கு முன்னதாக வேறு பல திட்டங்களை கொண்டிருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீகொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையே தற்போது பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் மத்தியில் தாம் வழங்கிய உறுதி மொழியினை நிறைவேற்ற முடியாத நிலையில் தற்போதைய ஜனாதிபதி நாட்டு மக்களின் கண்களின் மண் தூவுவதற்கான மற்றுமொரு நடகத்தை ஆடுகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சஹ்ரான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து எவ்வித சாட்சிகளும் இல்லை என தெரிவித்திருந்தார்.
ஆனால், சஹ்ரானின் தொலைபேசி, மடிக்கணினி, இலத்திரனியல் தொடர்பு சாதனம் அனைத்தும் விஞ்ஞானபூர்வமாக ஆராயப்பட்டு 2014ஆம் ஆண்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் உடனான அவரது தொடர்பு குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக பல இலக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தன்று காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தப்படவிருந்தது. தலதா மாளிகையின்; ஊர்வலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. சீனாவுக்கு பாதகத்தை ஏற்படுத்து வகையில் சங்ரில்லா விடுதிக்கும் தாக்குதல் நடத்துவதற்கும், இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்து வகையில் தாஜ் சமுத்திரா விடுதிக்கு தாக்குதல் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
எமது அரசாங்க ஆட்சியின் போது இந்த தாக்குதல்களில் பிரதான சூத்திரதாரியாக இப்ராஹிம் அடையாளப்படுத்தப்பட்டார் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் குறித்து எம்மை விட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியிலில் பெயரிடப்பட்டிருந்தவர். ஆகவேதான் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த விசாரணையினை முன்னெக்க முடியாதுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.



