நாளை மறுதினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு நாளை மறுதினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கோரியுள்ளது.

இதேவேளை, பரிசுத்த பாப்பரசரின் இறுதி நல்லடக்க ஆராதனையில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளைய (25) தினம் வத்திக்கான் நோக்கி பயணமாகவுள்ளார்.
அத்துடன் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்றிருந்தார்.
தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை வரவேற்றுள்ளார்.

பின்னர், பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் பரிசுத்த பாப்பரசருக்கான தனது இரங்கல் குறிப்பினை பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.