விடுவிக்கப்பட்ட இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகளே இடையூறாக இருக்கின்றன என்கிறார் வட மாகாண ஆளுநர்

விடுவிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன என்று வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இவை தொடர்பாக ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய செய்கையை விரைவுப்படுத்துவது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கென காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகளிடமிருந்து எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன என்று வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவர்களுக்கான மின்சார வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையினர் கோருவதாக அவர் தெரிவித்தார்.

பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன என்று வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.