முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ள நிலையில் அவர் தொடர்பான கருத்தாடல் அரசியல் மேடைகளில் அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு அரசியல் தரப்பினர் மாறுபட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதன்படி, ‘பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளர்’ என்றும் ‘அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார்.
பிள்ளையான் முக்கிய சாட்சியங்களை வெளியிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது என்றும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பிள்ளையான் விடயத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தவே உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர், ‘பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் தொடர்பில் கடந்த காலங்களில் சிங்கள பௌத்தவாதம், தேசியவாதம் பற்றி பேசிக்கொண்டிருந்த உதய கம்மன்பில தற்போது பேசுகிறார்’ என்று விமர்சித்துள்ளார்.
‘பிள்ளையான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உதய கம்மன்பில ஏன் முந்திக்கொள்கிறார்’.
‘உதய கம்மன்பில திணறாமல் சற்று அமைதியுடன் இருக்க வேண்டும்’ என்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிள்ளையான் கைது செய்யப்பட்டமையை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்கவும், உதய கம்மன்பிலவும் முயல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
‘பிள்ளையான், கருணாவுடன் இணைந்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தோற்கடிப்பதற்காக இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அவர் பாராளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றார்’. ‘எவ்வாறிருப்பினும் அவர் தவறிழைத்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கான உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.