தமிழர் விவகாரத்தில் சர்வதேசம் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயாரில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பட்டலந்த விடயத்தில் சர்வதேச பங்களிப்பை பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்க தயாராக இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச விசாரணை நிராகரிக்கப்படுகின்றமையானது முழுமையான இனவாத செயல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் தமிழ் மக்களுக்கு ஒன்றையேனும் நிறைவேற்றி உள்ளனரா? என்று கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மதவாதம் இனவாதம் ரீதியாகச் செயற்படுகிற இனவாதிகள் என்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை சாடியுள்ளார்.
ஐனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அதேபோல பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.

அதிலும் தமிழ் மக்கள் விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் தீர்வை ஏற்படுத்துவதாக கூறி இருந்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு எந்தவித முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.