தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டுமென கோடீஸ்வரன் பாராளுமன்றில் வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், கடந்த கால அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தாமையின் காரணமாகவே உள்நாட்டு நீதிப் பொறிமுறையை தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தயாராகின்றது. எனினும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளும் இனப்படுகொலைகளும் இடம்பெற்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருக்கவில்லை’.
‘அதன்காரணமாகவே, தமிழ் மக்கள் உள்நாட்டு நீதிப்பொறிமுறையை எதிர்க்கின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மாறாக சர்வதேசத்தின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்கள் கோருகின்றனர்.
எனவே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சகல வன்முறைகள் தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.