உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத 114 உள்ளுாராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்காக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இந்த மாதம் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் பணிகள் காரணமாக சகல அஞ்சல் பணியாளர்களினதும் விடுமுறை இன்று (06) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சகல அரச அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தல் வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.