இன்று இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.30 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு பிரதமர் மோடியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளன.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது.

இதன்போது வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மற்றும்  இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்ந்நிகர் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் அதிகபட்ச பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.