இலங்கைக்கும் வரியை அறிவித்த அமெரிக்கா!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 10 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கம்போடியா 49 சதவீத வரியையும், வியட்நாம் 46 சதவீத வரியையும், சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத கழிவு வழங்கப்பட்ட பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரியில் பேச்சுவார்த்தைகளின் ஊடாக நிவாரணங்களை பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கையில் 88 சதவீத வரி விதிக்கப்படுகிறது’.
‘இந்தநிலையில் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது’.’தற்போது அறிவிப்புகள் மாத்திரமே வெளியாகியுள்ளன’ என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

‘எனினும் இந்த வரி எதிர்வரும் 9ஆம் திகதியில் இருந்து அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது’.
‘எனவே, அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையின் ஊடாக குறித்த வரி அளவை குறைக்க முடியுமா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கா பரிசீலிக்காவிட்டால், அதற்கு பின்னர் எம்மால் மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்த முடியும்’ என்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வகையில் 10 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர், இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
அதேநேரம், அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்பு அமெரிக்காவுடன் நீண்டகால பொருளாதார உறவை கொண்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், ‘இலங்கையின் வரி கட்டமைப்பு ஒரே இரவில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல’ என்றும், ‘அது கடந்தகால கொள்கை வழிகாட்டுதல்களுக்கு அமைய, உருவாக்கப்பட்ட ஒன்றாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் சாத்தியம் நிலவுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

‘அமெரிக்காவின் நடவடிக்கையானது இலங்கையில் உள்ள சில தொழிற்சாலைகளை மூடுவதற்கு வழிவகுக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிவிதிப்பானது இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்திற்கு பாதகமான சமிக்ஞையை காட்டுகின்றது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.