கருணா உள்ளிட்டோருக்கு எதிரான பிரித்தானியாவின் தடை தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்று நியமிப்பு

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 4 இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியாவினால் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தங்களின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற, இந்த விடயம் தொடர்பான நிபுணத்துவத்துவம் மிக்க வேறெந்தஅதிகாரியினதோ அல்லது நிபுணர்களினதோ சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும் குறித்த குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாதுகாப்புப் படைகளின் முன்னாள்; தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.