செம்மணி அகழ்வாய்வுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இவற்றை ஆராய்ந்த மன்று, வழக்கை நாளைமறுதினம் வரை தவணையிட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பான கட்டளைகள் நாளைமறுதினம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சனும், ரனித்தா ஞானராஜாவும் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.