உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் மீண்டும் நாளை மறுதினம் (03) இடம்பெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 37 நீதிப்பேராணை மனுக்கள் எஸ்.துரைராசா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ள மூன்று வேட்பு மனுக்கள் தொடர்பான இணக்கம் ஏலவே எட்டப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் கனிஷ்கா டி சில்வா இதன்போது மன்றுரைத்தார்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த வார இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர்கள் ஆகிய தரப்பினரின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்படி, ஏற்றுக் கொள்ளக் கூடிய தகைமைகளை கொண்டுள்ள மூன்று வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு குறித்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மன்றாடியர் நாயகம் மன்றுரைத்தார்.
தொடர்ந்து சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி மன்றாடியர் நாயகம், ஏனைய மனுக்களை முன்கொண்டு செல்வது தொடர்பில் அடிப்படை ஆட்சேபனையை முன்வைப்பதாக தெரிவித்தார்.
‘உள்ளூராட்சிமன்ற சட்டவிதிகளுக்கு அமைய, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலோ உயர்நீதிமன்றில் நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்ய முடியாது’ என அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுகள் மற்றும் விதிகளுக்கு அமையவே, தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் செயற்படுவதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், தர்ஷன வேரதூவகே மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் மன்றுரைத்தனர்.
‘இதன்படி, தெரிவத்தாட்சி அதிகாரிகளால் ஆற்றப்படும் செயற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளாக கருதி நீதிப் பேராணை மனுக்களின் ஊடாக அவற்றை உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்’ என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தநிலையில் இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம், வழக்கு விசாரணையை நாளை மறுதினம் வரை ஒத்தி வைத்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை (02) வரை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’.
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்ற மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உள்ளிட்ட தரப்பினால் சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தங்களின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தீர்மானித்தமை முழுமையாக சட்டத்துக்கு முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தீர்மானத்தை வலுவற்றதாக்கி, குறித்த வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ள உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.