மியன்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்ப இலங்கை தயார் – சுகாதார அமைச்சு

மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மருத்துவக்குழு ஒன்றை அந்நாட்டுக்கு  அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு இராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.

மேலும்  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தற்போது அந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட வைத்தியர்கள் மற்றும்  தாதியர்கள் உள்ளடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மியன்மாருக்கு உதவி வழங்குவது தொடர்பில்  இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.