கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன.
வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு மறுபுறமும் இப் போது பேசும் பொருளாக உள்ளது.
‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும்   புரிந்துணர்வு  ஒப்பந்தம் கடந்த 15/03/2025, ம் திகதி இடம் பெற்று சரியாக ஒருவாரம் கடந்த நிலையில் கடந்த 22/03/2025, ல் கருணா  என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையானுடன் இணைந்து இருவரும் மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால்  2018ம் ஆண்டு கிழக்கு மாகாணத் தில் கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவ நாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். என 2018, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ்தேசியத்துக்கு எதிராக பிரதேசவாத மூல தனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பை கிழக்கு மக்கள் புறக்கணித்தனர் அதில் உள்ளவர்களே விலகியதே வரலாறு அந்த 2018, ஆரம்பித்து செயலற்றுக்கிடந்ததை தூசி தட்டி இப்போது 2025, உள்ளூராட்சி தேர்தலில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என படம் காட்டப்படுகிறதே தவிர இது எந்த மாற்றத்தையும் கொண்டுவரப்போதில்லை.
கிழக்குமாகாணத்தில் அரசியல் பலத்தை கட்டி எழுப்பி அபிவிருத்திகளை செய்வதாகவும், தனித்துவமாக கிழக்கு மாகாணத்தை வழி நடத்துவதாகவும் ஊடகங்களில் கருத்து கூறிய பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இணைந்த வடகிழக்கு கொள்கைக்கு முரணாக பிரதேச வாத கருத்தையே இவர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பதாகவே இவர்களுடைய கருத்துகளும் செயற்பாடுகளும் எதிர்வரும் உள்ளூ ராட்சி சபை தேர்தலில் அமையும்.
இவர்கள் மூவரும் கிழக்கு என்ற பெயரை மட்டக்களப்பில் மட்டுமே பயன்படுத்தி அரசியல் செய்வதே கடந்தகால வரலாறாகும். இதையே தற்போதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் உள்ளூராட்சி தேர்தலில் பயன்படுத்துவார்கள் என்பதே உண்மை.
பிள்ளையானும், வியாழேந்திரனும் செய்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா இணைந்த தன் மூலம் இருக்கும் செல்வாக்கும் இல்லாமல் போகும் நிலையே தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த 24/03/2025 ம் திகதி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருடன் கருணா என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதர னுக்கும் ஐக்கிய இராச்சியம் தடை  விதித்துள்ளது.
அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற் கொள் வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருணாவை பிரித்தானியா தடை செய்த செய்தி வந்து மறுநாள் 25/03/2025 கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதானியில் ஒருவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த
மாதம் ஏப்ரல் 1, வரை விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளார்.
கருணாவை பிள்ளையான் தமது அணியில் இணைத்தமையால் இருந்த செல்வாக்கும் இழக்கும் நிலைமையும், வியா ழேந்திரனை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைதால் இப்போது உள்ளூராட்சி சபைத்தேர்தலில் எதிர் பார்த்த ஆசனங்களை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பெற முடியாமல் போகலாம். பிள்ளையான், வியாழேந்திரன், கருணா இந்த மூவரும் இணைந்து ஒருவாரம் கடக்கும் முன்னே இருவருக்கு முகத்தில் கரிபூசப் பட்டுள்ளது, கருணாவுக்கு பிரித்தானியா தடை போட்டுள்ளது, வியாழேந்திரன் ஊழல் தடுப்பு பிரிவால் கைதாகியுள்ளார். எஞ்சிய பிள்ளையான் செய்வதறியாது விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போன்று உள்ளூராட்சி சபை தேர்தலில் முகம்கொடுக்கிறார் இது நல்ல சகுனமாக அவர்களுக்கு இல்லை.
அதற்காக இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது கிழக்கில் பல்வேறு கட்சிகளுக்கும் ஆதரவு சென்றடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் தேர்தல் பிரசாரங்கள் கிழக்கில் இன்னும் களைகட்டவில்லை மந்த நிலையிலேயே சகல கட்சிகளும், சுயேட்சை குழுக்க ளும் வேட்பாளர்கள் தனியாகவும், ஒரு சில ஆதர வாளர்களை அழைத்துக்கொண்டும் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு  ஒவ்வொரு வட்டாரத்திலும் பத்து பதினாறு பேர் ஊர் களில் வேட்பாளர்களை பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் நிறுத்தி உள்ளதால் கட்சி அரசியலை விட ஊர் செல்வாக்கு, ஊர் சமூக செல்வாக்கு, அந்தந்த வேட்பாளர்களின் கடந்த கால செயல்பாடுகளை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதால் பலர் தாம் யாருடைய ஆதரவாளர்கள் என்பதை வெளிக்காட்டாமல் மௌ னமாக இருந்து தேர்தல் தினத்தில் வாக்களிக்கலாம் என்ற மனோநிலையில்தான் கிழக்கு மாகாணத்தில் பலர் உள்ளதை அவதானிக்க முடிகிறது.
தேர்தல் முறை கலப்பு தேர்தல் முறை என்பதால் கட்சி அரசியலை விட தனி நபர் செல்வாக்கே இந்த தேர்தலில் உறுப்பினர்களின் ஆசனங்களை நிர்ணயிக்கும். “நாடு அநுராவோடு ஊர் எங்களோடு” என கனவு காணும் சில தமிழ்த்தேசியகட்சிகளுக்கு வடக்கிலும்,கிழக்கிலும் ஊரும் அநுராவோடு உள்ள நிலையில் தற்போது பல தமிழ் இளைஞர்கள் இன்றும் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகுவதாக தெரியவில்லை.
இதற்கான முழுப்பொறுப்பும் அனைத்து தமிழ்தேசிய கட்சிகளையுமே சாரும். கடந்த பொதுத்தேர்தலில் கற்றுக்கொண்ட பாடத்தில் இருந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலி லும் அவர்கள்  திருந்தியதாக இன்னும் இல்லை.
கிழக்கில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இன்னுமொரு புதிய அணுகுமுறையை கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி யிட்டு படு தோல்வியை தழுவிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக எல்லா பிரதேச சபைகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபையிலும் போட்டியிடவில்லை அவர்கள் சுயேட்சை குழுக் களாகபோட்டியிடுவதையும் காணமுடிகிறது.
இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் போட்டி யிட சங்குச்சின்னத்தை ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது குத்து விளக்கு சின்னத்தை மாற்றி சங்கு சின்னத்தை தமது கட்சி சின்னமாக காட்டி பிரசாரம் செய்தபோதும் தமிழ்மக்கள் அவர்களை பொதுத்தேர்தலில் ஒரு பொருட்டாக ஏற்கவில்லை இதனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் இந்த தடவை அநேகமான பிரதேச சபைகளில் சங்கு சின்னத்தை அவர்கள் கிழக்கில் பயன்படுத்தாமல் சுயேட்சையாகவும் பல சபைக ளில் போட்டியிடுவதையும் காணலாம்.