கனடாவின் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இருக்காது என்பதனை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை நினைவுகூர்வதற்காக கொண்டு வரப்பட்ட 104 என்ற சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்காளி சார்பில் மன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்த நெவில் ஹெவகே, 104 என்ற சட்டமூலம் கல்வி நோக்கங்களை கொண்டிருக்கவில்லை என வாதிட்டார்.
இந்தநிலையில் ‘குறித்த சட்டமூலத்தை ஒன்டாறியோவில் கல்வி நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது’ என்றும் ‘சுய விழிப்புணர்வு மற்றும் நினைவு கூர்தல் நோக்கங்களுக்காக மாத்திரம் அதனை பயன்படுத்தலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஒன்டாறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ‘இந்த தீர்ப்பு கனடா உள்ளிட்ட உலக வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ‘இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாறியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.