வடக்கில் கைத்தொழிற்துறை மேம்படுத்தப்படும் என உறுதி!

வடக்கு கிழக்கில் காணப்பட்ட பல தொழிற்சாலைகள் திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில்  (18) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்யாண்மை அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘குறிப்பாக யுத்தத்தில் அழிவடைந்த கைத்தொழில் துறைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து கருத்துரைத்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒட்டுச்சுட்டானில் உள்ள ஓடு உற்பத்தி தொழிற்சாலையின் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘பண்டார வன்னியன் என்ற பெயரில் குறித்த ஓடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன’.
‘அத்துடன் வெப்பத்தை குறைக்கும் வகையிலான திறன் கொண்ட செங்கல் உற்பத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘அதேபோன்று பரந்தன் இரசாயன தொழிற்துறை வலயத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’.

‘அத்துடன் அரச உப்பு என்ற அடிப்படையில் ஆணையிறவில் இருந்து எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மேசை உப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

‘அங்கு வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு தமது பாராட்டுக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், ‘ஆணையிறவு உப்பு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பு என்ற வரலாற்று பெயரிலேயே உப்புகள் விநியோகிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

‘அதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.